தமிழ்கல்விச்சேவையினரால் சுவிற்சர்லாந்தில் வாழும் ஈழத்தமிழ் சிறார்கள் மத்தியில்  நடத்தப்பட்டு வரும் 16 வது பொதுப்பரீட்சை இன்று 08.05.2010  சிறப்புடன் நடைபெற்றது. சுவிற்சர்லாந்தில் வாழும் மொத்தம் 4600 தமிழ் சிறுமியர்களும், சிறுவர்களும் கலந்து கொண்ட இப்பரீட்சைகள்  நாடெங்கிலும் 46 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது.

 

இப்பரீட்சையில் முதலாம் வகுப்பு தொடக்கம் பத்தாம் வகுப்பு வரையான மாணவிகளும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.  தமிழ் மொழி. சைவ சமயம், ரோமன் கத்தோலிக்கம் ஆகிய பாடங்களுக்கு பரீட்சை நடைபெற்றது. நாடெங்கிலும் ஒரே நேரத்தில் காலை 9.15 மணிக்கு தாயகத்தில் ஸ்ரீலங்கா அரச இராணுவத்தால் கொல்லப்பட்ட மக்களுக்கான அகவணக்கத்தை அடுத்து 9.30 மணிக்கு ஆரம்பித்த பரீட்சைகள் 13.30 மணிவரை நடைபெற்றது.

15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் மொத்தம் 306 ஆசிரியர்கள் மேற்பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.  இம் மேற்பார்வையாளர்களில் சுவிற்சர்லாந்தில் பிறந்து தமிழ் கல்வியை இங்கு பயின்று தற்போது உதவி தமிழ் ஆசிரியர்களாக கடமையாற்றும் தலைமுறையினரும் கலந்து கொண்டது சிறப்பம்சமாக இருந்தது.

 

புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் ஈழத்தமிழ் மக்கள் மத்தியிலான சிறார்களின் தாய்மொழி அறிவை வளர்க்க தமிழ் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து எடுத்து வரும் சிறப்பான சேவை பாராட்டுக்குரியது. பலத்த நிர்வாக சிரமங்களின் மத்தியிலும்  சிறந்த முறையில் செயற்பட்டு 16 வருடங்களாக இப்பரீட்சைகளை தொடர்ச்சியாக நடத்திவரும் சுவிற்சர்லாந்து தமிழ் கல்விச்சேவைக்கு முரசம் தனது  பாராட்டுகளை தெரிவிக்கின்றது.  

இதேவேளை பரீட்சைகள் நடத்துவதுடன் மட்டும் திருப்தி கொள்ளாது எதிர்காலத்தில் இங்கு வாழ்ந்து வரும் சிறார்களுக்கு இலகுவான  முறையில் தாய்மொழிக்கல்வியை கற்பிக்கக்கூடிய கற்பித்தல் நுட்பங்களை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு அதை நடைமுறைபடுத்த தமிழ்க்கல்விச்சேவை சுவிற்சர்லாந்து முன்வரவேண்டும் என்பதே முரசத்தின் விருப்பம் ஆகும்.

 

நன்றி: முரசம்

படங்கள்

தொடர்பு

 

Regensbergstr.238
8050 Zürich
044 440 20 55

info@tamilschool.ch