உயர்கல்வி, தொழிற்கல்வி, பணிகள் போன்ற பல்வேறு காரணங்களினால் தமிழ்ப்பள்ளிகளுக்கு நேரில் வருகைதந்து தமிழ்மொழியினைக் கற்கமுடியாதிருக்கும் பிள்ளைகளுக்குத் தமிழ்மொழிக் கல்வியைத் தொடர்வதற்கு வசதியாக இணைய வழியிலான தமிழ்மொழி வகுப்புகள் இக்கல்வியாண்டுமுதல் 2025 செப்டெம்பர் மாதம் தொடங்கவிருக்கின்றது.
இவ் வகுப்புகளில்
- தமிழ்மொழியைக் கற்று இடைவிலகிய பிள்ளைகள்
- தமிழ்மொழியை இதுவரை கற்காத பிள்ளைகள்
- தமிழ்மொழியில் அறிவை மேம்படுத்த விரும்புபவர்கள்
அனைவரும் இணைந்து கொள்ளலாம். தகைமையும் பட்டறிவும் மிக்க ஆசிரியர்களினால்
இணையவழியில் வகுப்புகள் நடாத்தப்படும். Micorosoft Teams வழியாக ஆகப்பிந்திய தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி வகுப்புகள் நடாத்தப்படும்.
இணைந்துகொள்பவர்களது தமிழறிவு, அவர்களுக்கு வசதியான நேரம் என்பன கவனத்தில் எடுக்கப்பட்டு வகுப்புகள் ஒழுங்குபடுத்தப்படும். ஒவ்வொரு வகுப்பிலும் மட்டுப்படுத்தப்பட்ட மாணவர்களே இணைத்துக் கொள்ளப்படுவர்.
தமிழ்க் கல்விச்சேவையால் தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் பாடநூல்கள் இவ்வகுப்புகளுக்கும் பயன்படுத்தப்படும். முதலாம் அரையாண்டுத்தேர்வும் பொதுத்தேர்வும் நேரடியாக நடாத்தப்படும். மாணவர்கள் ஆசிரியர்களை ஒரு கல்வியாண்டில் குறைந்தது இரு நாள்கள் நேரில் சந்தித்துக் கலந்துரையாடுவார்கள். முதலாம் அரையாண்டில் டிசம்பர் மாதமும் இரண்டாம் அரையாண்டில் ஏப்ரல் மாதமும் மாணவர்களினதும் ஆசிரியர்களதும் வசதிக்கேற்ப நேரடிச்சந்திப்பு இடம்பெறலாம்.
ஆண்டுதோறும் மே மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் பொதுத்தேர்வுக்கு இம்மாணவர்கள் தோற்றி சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்வர். ஆண்டு 10, ஆண்டு 12 இனை நிறைவுசெய்யும் மாணவர்கள் ஆண்டுதோறும் செப்டெம்பர் மாதத்தில் நடைபெறும் முத்தமிழ் விழாவில் மதிப்பளிப்பினைப் பெற்றுக்கொள்வர்.
விரும்பிய அனைவரையும் இவ்வகுப்புகளில் இணைந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இதற்கான விண்ணப்பப்படிவத்தை முழுமைப்படுத்தி தமிழ்க் கல்விச்சேவை பணியகத்திற்கு அனுப்பிவையுங்கள்.
விண்ணப்பப்படிவத்தை தமிழ்ப்பள்ளிகளிலும், தமிழ்க் கல்விச்சேவையின் இணையத்தளத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பப்படிவம் அனுப்பவேண்டிய முகவரி:
Hybrid Learning
Tamil Education Service Switzerland
Regensbergstrasse 238
8050 Zürich