சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் வருடாந்தம் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 23 ஆவது வருடமாக இன்று, 06.05.2017 ஆம் திகதி சுவிற்சர்லாந்து நாடுதழுவிய வகையில் 62 தேர்வு நிலையங்களில் சிறப்புற நடைபெற்றது. இத்தேர்வில் முதலாம் வகுப்புத் தொடக்கம் பதினோராம் வகுப்பு வரையில் கல்விபயிலும் 5300 மாணவர்கள் பங்குபற்றினர். எழுத்துத்தேர்வுடன் இவ்வருடம்முதல் புலன்மொழித்தேர்வுகளும்; நடாத்தப்பெற்றன. இக் கல்வியாண்டுமுதல் புதிதாக ஆரம்பிக்கப்பெற்ற பதினோராம் வகுப்புத்தேர்வில் 164 மாணவர்கள் தோற்றியமை சிறப்பாகும். தமிழ்க் கல்விச்சேவையினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாடநூல்கள் தாய்மொழிக்கல்வியில் தமிழ்க் குழந்தைகளின் ஈடுபாட்டை அதிகரித்துள்ளது. இத்தேர்வின்போது தமிழ்ப்பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்கள் மேற்பார்வையாளர்களாகக் கடமை புரிந்தனர். குறிப்பாக, பழையமாணவர்கள் இப்பணியில் அக்கறையுடன் பங்கெடுத்துக் கொண்டனர். தமிழ்க் குழந்தைகள் தாய்மொழிக்கல்வியில் காட்டும் ஆர்வமும் தாய்மொழி மீது பற்றுக்கொண்ட பெற்றோரின் ஊக்கமும் தமிழ்மொழிக் கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் உறுதுணையாக உள்ளது. இத்தேர்வு நிறைவாக நடைபெற உழைத்த அனைவருக்கும் தமிழ்க்கல்விச்சேவை நன்றி தெரிவிக்கிறது.

சுவிற்சர்லாந்து நாட்டில் வாழும் தமிழ்க் குழந்தைகள் அனைவரும் தமது தாய்மொழியைக் கற்பதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தி வழங்க வேண்டுமென்பது கல்விச்சேவையின் நோக்கமாகும்.
தமிழ் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை அதிகரிப்பதற்கும் தமிழ்க் குழந்தைகள் விருப்பத்துடன் தமது தாய்மொழியைக் கற்பதற்கு ஏற்றசூழலை உருவாக்குவதற்கும் கல்விச்சேவை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

Leave a Reply