- தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து, சுவிற்சர்லாந்தில் பதிவு செய்யப்பெற்று செயற்பட்டுவருகிறது. இதன் பதிவு இல: CHE - 157.468.625 ஆகும்.
- தமிழ்ப்பள்ளிகளில் தமிழ்மொழி முதன்மைப் பாடமாகவும், சைவசமயம், றோமன்கத்தோலிக்க சமயம் ஆகியன தெரிவுப்பாடங்களாகவும் கற்பிக்கப்பெறும்.
- முதலாம் அரையாண்டுத்தேர்வு, இரண்டாம் அரையாண்டுத்தேர்வு ஆகிய இரு அரையாண்டுத்தேர்வுகளும் பொதுத்தேர்வும் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும். பொதுத்தேர்வு வகுப்பேற்றத்திற்கான தேர்வாகக் கருதப்பெறும். பொதுத்தேர்வானது ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல்வாரம் வரும் சனிக்கிழமை நடாத்தப்பெறும். (சில சந்தர்ப்பத்தில் மட்டும் அரச விடுமுறைகளுக்கு அமைய ஒரு வாரம் முன்னர் அல்லது பின்னர் அமையலாம்)
- ஆண்டுதோறும் தமிழ்க்கல்விச்சேவையின் விதிமுறைகளுக்கமைய மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பெறுவர். சுவிற்சர்லாந்து அரச பள்ளிகளில் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளும் நடைமுறைக்கமைய வயதெல்லை தமிழ்ப்பள்ளிகளிலும் பின்பற்றப்பெறும்.
- மாணவர்கள் பள்ளி ஆரம்பிப்பதற்கு முன்னரே வகுப்பறைக்குச் சமூகமளித்திருத்தல் வேண்டும். ஏதேனும் காரணத்தினால் குறிப்பிட்ட மாணவர் எதிர்பாராத விதமாக குறிப்பிட்ட ஒரு தினத்தில் தமிழ்ப்பள்ளிக்கு வருகைதர இயலாவிடின், அவரது வரவின்மையை முற்கூட்டியே வகுப்பாசிரியருக்கு அல்லது பள்ளி முதல்வருக்கு பெற்றோர் தொலைபேசி மூலம் தெரியப்படுத்தல் வேண்டும். குறிப்பிட்ட நாளில் வகுப்புக்கு வரமுடியாமையை முற்கூட்டியே தெரியுமாயின், அதனை ஆசிரியர் பெற்றோர் தொடர்புக் குறிப்பேட்டில் எழுதி ஆசிரியருக்குத் தெரியப்படுத்துதல் வேண்டும்.
- ஆசிரியர் பெற்றோர் தொடர்புக் குறிப்பேட்டினை வகுப்புகள் நடைபெறும் நாள்களில், வகுப்புகள் நிறைவடைந்து மாணவர் வீடு திரும்பியதும் பெற்றோர் பார்வையிட்டு, அதில் பெற்றோர் கவனத்திற்கு ஆசிரியரால் ஏதாவது தெரிவிக்கப்பட்டிருந்தால், அக்குறிப்பினைப் பார்வையிட்டமையை உறுதிப்படுத்துதல் வேண்டும்.
- பள்ளி நேரத்தில் மாணவர் நடத்தை முக்கியமானதாகும். சிறந்த மாணவர் தெரிவின்போதும், வகுப்பேற்றத்தின் போதும் மாணவர் நடத்தை கவனிக்கப்பெறும்.
- மாணவர் வரவுகள் ஒழுங்காக இருந்தால் மட்டுமே, இம்மாணவர் தேர்வுகள், போட்டிகள் கலைநிகழ்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பெறுவர்.
- பள்ளி நேரத்தின்போது மாணவர்களின் நடத்தையால் வகுப்பறையிலோ, பள்ளிச் சுற்றாடலிலோ ஏற்படும் சேதங்களுக்கு நட்டஈட்டு ஒப்பந்தம் ஒன்றினைத் தமிழ்க் கல்விச்சேவை செய்துள்ளது. எனினும் இந் நட்டஈட்டு ஒப்பந்தத்தில் அடங்காத, மாணவரால் ஏற்படுத்தப்பெறும் பெரிய சேதங்களுக்கான செலவுகளை பெற்றோர் பொறுப்பேற்றல் வேண்டும்.
- மாணவர் பள்ளிக்கு ஒழுங்காகச் சமூகமளிப்பதனைப் பெற்றோர் உறுதிப்படுத்துதல் வேண்டும். மாணவர் பள்ளிக்கு வருவதாகப் புறப்பட்டு பள்ளிக்குச் சமூகமளிக்காமல் வேறேதும் வேலைகளில் ஈடுபட்டால் இதற்குப் பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்காது. மாணவர் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளிக்கு சமூகமளித்து வீடு திரும்புவதை உறுதிப்படுத்துவது பெற்றோரது கடமையாகும்.
- ஒரு பள்ளி சிறப்புறச் செயற்பட பெற்றோரது பங்களிப்பு இன்றியமையாததாகும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் கல்விநிலை தொடர்பாக ஆசிரியருடனும், நிர்வாகம் தொடர்பாக பள்ளி முதல்வர், துணை முதல்வர் ஆகியோருடனும், மாணவர் கட்டணம் மற்றும் ஏனைய பொதுவான கல்வி விடயங்கள், ஆலோசனைகள் தொடர்பாகத் தமிழ்க் கல்விச்சேவை பணியகத்துடனும் தொடர்பு கொள்ளலாம்.
- ஒரு மாணவர் ஏதேனும் காரணத்தினால் பள்ளி மாற்றம் செய்யவேண்டியிருப்பின், அதற்கான படிவத்தை முழுமைப்படுத்தி, மாணவர் கற்றுவரும் பள்ளி முதல்வர் கையொப்பத்துடன், புதிய பள்ளி முதல்வரிடம் ஒப்படைத்தல் வேண்டும்.
- தமிழ்ப்பள்ளியில் கற்பதற்கான மாணவர் கட்டணம் மணித்தியாலம் ஒன்றிற்கு நான்கு (4.00) சுவிஸ்பிராங்குகள் ஆகும். இக்கட்டணத்தினை அரையாண்டிற்கொருமுறை செலுத்துவதற்கு பெற்றோர் கடமைப்பட்டுள்ளனர். பெற்றோரின் தெரிவாக மாதாந்தம் இக்கட்டணத்தினை செலுத்த விரும்பின், மாதாந்தக் கட்டணத்திற்கு மேலதிகமாக இரண்டு (2.00) சுவிஸ்பிராங்குகள் செலுத்தவேண்டும். மாணவர் கட்டணத்தினைப் பணம் கட்டும் பத்திரத்தில் குறிப்பிடப்படும் காலப்பகுதிக்கு உள்ளாக அல்லது முதலாவது நினைவூட்டல் காலப்பகுதிக்குள் செலுத்துதல் வேண்டும். இல்லாதுவிடின் இரண்டாம் நினைவூட்டல் கட்டணமாக பத்து (10) சுவிஸ்பிராங்குகள் அறவிடப்பெறும். தொடர்ந்தும் செலுத்தத்தவறின் இக்கட்டணத்தினை அறவிடுவதற்கு, சுவிற்சர்லாந்து நாட்டு சட்ட நடைமுறைகளுக்கமைவாக நடவடிக்கைகளினை எடுப்பதற்கு தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து அமைப்பிற்கு உரிமையுண்டு.
- ஏதேனும் காரணத்தினால் ஒரு மாணவர் தமிழ்ப்பள்ளியை விட்டு விலக வேண்டியிருப்பின் அதற்கான படிவத்தை முழுமைப்படுத்தி பள்ளி முதல்வரிடம் சமர்ப்பித்தல் வேண்டும். இவ்வாறு படிவம் சமர்ப்பிக்கும் அரையாண்டின் முடிவிலேயே இம்மாணவர் விலகியவராகக் கருதப்படுவர். எழுத்து மூலம் அறிவித்து விலகாத மாணவர்கள் பள்ளியில் தொடர்ந்து கற்றுவருவதாகக் கருதப்பெற்று அவர்களிடமிருந்து மாணவர் கட்டணம் அறவிடப்பெறும்.
- ஏதேனும் காரணங்களுக்காக ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கு தற்காலிகமாக பள்ளியிலிருந்து இடைவிலக விரும்பும் மாணவர்களின் பெற்றோர்கள் அதற்கான படிவத்தை முழுமைப்படுத்தி பள்ளிமுதல்வரிடம் சமர்ப்பிப்பதுடன், திரும்ப சேரும்போது அதற்கான கட்டணமாக 25.00 சுவிஸ் பிராங்கினைச் செலுத்துதல் வேண்டும்.