சிகாகோவில் நடைபெற்ற பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மகாநாடு

பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மகாநாடு இந்த ஆண்டு (2019) யூலை மாதம் 4 ஆம் நாள் முதல் 7 ஆம் நாள் வரை அமெரிக்கா சிகாகோ நகரில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த மகாநாட்டினை வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் (FeTNA)இ  சிகாகோ தமிழ்ச்சங்கமும், உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தோடு (IATR) இணைந்து நடாத்தின. அமெரிக்கா உட்பட உலகமெங்கும் வாழும் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வலர்கள், தமிழ்ப் பேரறிஞர்கள், ஆய்வாளர்கள் எனப் பலரும் இம் மகாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

உலக தமிழ் ஆய்வு மன்றம் 1964 ஆம் ஆண்டு ஈழத்துத் தமிழ்ப் பேரறிஞர் தவத்திரு தனிநாயகம் அடிகளார் அவர்களின் பெருமுயற்சியில் நிறுவப்பெற்றது. முதலாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டினை 1966 ஆம் ஆண்டு உலகெங்குமுள்ள பல நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்களை ஒன்றுகூட்டி, அப்போது மலாய்ப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையின் தலைவராகப் பணியாற்றிக்கொண்டிருந்த தனிநாயகம் அடிகளார் மலேசியா கோலாலம்பூரில் நடாத்தினார்.

இரண்டாவது மகாநாடு 1968 ஆம் ஆண்டு சென்னையில் அப்போதைய முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா தலைமையிலும், மூன்றாவது மகாநாடு 1970 இல் பாரிஸ் நகரிலும், நான்காவது மகாநாடு 1974 இல் யாழ்ப்பாணத்திலும், ஐந்தாவது மகாநாடு 1981 இல் மதுரையிலும், ஆறாவது மகாநாடு 1987 இல் கோலாலம்பூரிலும், ஏழாவது மகாநாடு 1989 இல் மொறிசியஸ் போர்ட்டு லூயிசிலும், எட்டாவது மகாநாடு 1995 இல் தஞ்சாவூரிலும், ஒன்பதாவது மகாநாடு 2015 இல் கோலாலம்பூரிலும் நடைபெற்றன.

இம் மகாநாடுகள் அரசியல் தலையீடு இன்றி தமிழ் ஆராய்ச்சியை முதன்மைப்படுத்தி நடைபெற்றன. தமிழ்ப் பேரறிஞர்கள் வரவழைக்கப்பெற்று தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், தமிழர் பண்பாடு ஆகியவற்றில் அவர்கள் செய்த ஆய்வுகளைச் சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பெற்றது.

1974 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது மகாநாட்டின் இறுதிநாளில் சிங்கள இனவாதத்தால் திட்டமிட்டு கலகம் உருவாக்கப்பட்டு, ஒன்பது தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட வரலாற்றுத் துன்பியல் நிகழ்வு நடைபெற்றது. இம் மகாநாடு ஈழத்துத் தமிழ் இளைஞரிடையே தமிழுணர்வு மேலும் அதிகரிக்கக் காரணமாகியது.

10 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மகாநாடு அமெரிக்கா சிக்காகோ நகரில் 2019 யூலை 4 – 7 வரை நான்கு நாட்கள் நடைபெற்றது. தமிழாராய்ச்சி மகாநாடு, வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 32 ஆவது விழா, சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா என முப்பெரும் சிறப்பு விழாவாக இம் மகாநாடு நடைபெற்றது. வட அமெரிக்கா தமிழ்ச்சங்கப் பேரவை அந்நாட்டிலுள்ள 50 இற்கும் மேற்பட்ட சங்கங்களை ஒன்றிணைத்து தமிழ் இனத்திற்கும் மொழிக்குமாக பல ஆண்டுகள் சேவை செய்து வருகிறது. 10 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டின் நோக்கம் ‘தமிழினம், தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் தொன்மையை புது வரலாற்றியல் நோக்கிலும் அறிவியல் அடிப்படையிலும் ஒப்பியல் முறையிலும் ஆய்வு செய்தல்’ என்பது ஆகும். இம் மகாநாட்டில் 50 இற்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து தமிழ் ஆர்வலர்கள் மற்றும் தமிழறிஞர்கள் கலந்துகொண்டனர்.

‘கீழடி எம் தாய்மடி’ என்பது இம்மகாநாட்டின் கருப்பொருளாக அமைந்திருந்தது. ஷகீழடி’ உட்பட தமிழ்நாட்டிலும், ஈழத்திலும் நடைபெற்றுவரும் அகழ்வாய்வுப் பணிகள் முழுமைபெற்று, தமிழரின் தொன்மையான வரலாறு வெளிக்கொணரப்பெற்று, தமிழ் உலகின் முதல்மொழி என்பதும் தமிழர்கள் உலகின் மூத்த குடி என்பதும் நிறுவப்பெறும் என்பது தமிழர்களின் நம்பிக்கையாகும்.

கனடா நாட்டைச் சேர்ந்த முனைவர் ஜி.யு. போப் (1820-1908) அவர்கள் தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக அவர் தமிழுக்கு ஆற்றிய பணியைப் போற்றும் விதமாக அவரது 200 ஆவது பிறந்த நாளினைக் கொண்டாடும் நிகழ்வுகளும் இம் மகாநாட்டில் இடம்பிடித்தன.

முதல் இருநாட்களும் வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 32 ஆம் தமிழ்விழா, சிகாகோ தமிழ்ச்சங்கப் பொன்விழா ஆகியன சிறப்புரைகளுடனும் கலைநிகழ்வுகளுடனும் மிகச் சிறப்பாக நடைபெற்றன. கலைநிகழ்வுகளில் தமிழரின் மரபுக்கலைகளே முக்கிய இடத்தைப் பிடித்தன. முதன்மை மேடையில் நிகழ்வுகள் நடக்கும் அதே நேரம் நிகழ்வு மண்டபத்தின் பக்க அறைகளில் தமிழ்மொழிக் கல்வி மற்றும் தமிழினம் தொடர்பான பல்வேறு செயற்பாடுகள் பற்றிய கலந்துரையாடல்களும், கருத்தரங்குகளும் இடம்பெற்றன. நிகழ்வு மண்டபத்தின் பல இடங்களில் தமிழரின் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொழில்நுட்ப மற்றும் அறிவாற்றலை பறைசாற்றும் கல்லணை உட்பட பல்வேறு சாதனைகள் மாதிரி வடிவில் அமைக்கப்பெற்று காட்சிப்படுத்தப்பட்டன. யூலை 6 ஆம் நாள் தமிழ் தொழில்முனைவோர் வலையமைப்பு கருத்தமர்வும் நடைபெற்றது.

சிறப்பு நிகழ்வாக உலகத் தமிழ்ச்சங்கங்களின் சங்கமம் எனும் நிகழ்வு யூலை 6 ஆம் நாள் நடைபெற்றது. மகாநாட்டில் கலந்துகொண்ட பல்வேறு நாட்டு தமிழ்ச்சங்கங்களும் ஊர்வலமாக வந்து தம்மை அறிமுகப்படுத்தியதுடன் பறை, கும்மி, காவடி உட்பட பல்வேறு கலைநிகழ்வுகளையும் வழங்கியிருந்தனர். குறிப்பாக, அமெரிக்க இலங்கைத் தமிழ்ச்சங்கம் 1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராச்சி மகாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாலயத்தைத் தோளில் சுமந்துவந்து தமிழினப் படுகொலைகளை நினைவூட்டினர்.

இறுதி இரு நாட்களும் ஆய்வரங்குகள் பல்வேறு அமர்வுகளாக நடைபெற்றன. ஏறத்தாழ 20 அமர்வுகளில் உலக நாடுகள் பலவற்றிலுமிருந்து வருகை தந்திருந்த 80 பேராளர்கள் தமது ஆய்வுகளைச் சமர்ப்பித்து விளக்கமளித்திருந்தனர். சுவிற்சர்லாந்து   தமிழ்க் கல்விச்சேவை சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் திரு. கந்தசாமி பார்த்திபன் இம் மகாநாட்டில் கலந்துகொண்டதுடன் தமிழ்க் கல்வி தொடர்பான கருத்தரங்கில் சுவிற்சர்லாந்து தமிழ்க்;கல்வி தொடர்பாகக் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதற்கும் ஏனைய புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ்க் கல்விதொடர்பில் ஒப்பாய்வு செய்வதற்கும் வாய்ப்புக்கிட்டியது.

இம் மகாநாட்டினை வரலாறு காணாத பெருவிழாவாக மிகச் சிறப்பாக நடாத்துவதற்கு அமெரிக்காவில் வாழ்ந்துவரும் தமிழ்மக்கள் மிகக் கடுமையாக உழைத்து அதில் வெற்றியும் கண்டனர். உலகத் தமிழரை ஒருங்கிணைத்து, தமிழன்னைக்குப் பெருவிழா எடுத்த அவர்கள் அனைவரும் போற்றுதற்குரியவர்கள். அவர்களுக்கு உலகமெங்கும் வாழும் தமிழர்கள் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

தொன்மை, வளம், செழிப்பு நிறைந்த தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழினம் பெருமைக்குரியது. அதனைச் சந்ததி சந்ததியாகப் பேணிப்பாதுகாக்கும் பொருட்டு, உலகில் தமிழ்மொழியின் ஆளுமையை பல்வேறு துறைகளிலும் அதிகரிக்க தமிழர்கள் நடவடிக்கை எடுத்தல் இன்றியமையாதது. இம் மகாநாடுகளின் வெற்றி, ஆய்வுகளைத் தொடர்வதிலும் அவற்றின் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதிலுமே தங்கியுள்ளது.

‘தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்.’

 

கந்தசாமி பார்த்திபன்,

ஒருங்கிணைப்பாளர்,

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து.