சுவிற்சர்லாந்தில் தமிழாசிரியர் பட்டயப் படிப்பின் பட்டயமளிப்பு விழா

சுவிற்சரலார்ந்து தமிழ்க்கல்விச்சேவை,  இந்தியாவில் இயங்கி வரும் SRM பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்திய அயலகத் தமிழாசிரியர் பட்டயப் படிப்பினை நிறைவு செய்தவர்களுக்கான பட்டயமளிப்பு விழா கடந்த 10.09.2016ஆம் திகதி  காலை 10:00 மணி முதல் சூரிச் ஆசிரியர் கல்விப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது.
இப்பட்டயமளிப்பு விழாவில் SRM பல்கலைக்கழகத் தேர்வு ஆணையாளர் முனைவர் எஸ். பொன்னுச்சாமி அவர்களும் பேராசிரியர் இல.சுந்தரம் அவர்களும் சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் தலைவர் திரு. சு. உதயபாரதிலிங்கம், இணைப்பாளர் திரு. க. பார்த்திபன், சூரிச் ஆசிரியர் கல்விப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், சூரிச் கல்வித் திணைக்களத்தின் உயரதிகாரிகள், பேராசிரியர்கள் அ. சண்முகதாஸ், மனோன்மணி சண்முகதாஸ், கே. கல்யாணசுந்தரம், கனடா தமிழ் அக்கடமியின் தலைவர் திரு. துரைராஜா எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

விழாவின் தொடக்கமாக இப்பட்டயமளிப்பு விழாவிற்கு வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அணிவகுப்பு இசையுடன் அரங்கினுள் அழைத்து வரப்பட்டனர். தமிழ்மொழி வாழ்த்து, சுவிஸ் நாட்டுப்பண், தமிழ்த்தாய் வாழ்த்து, அகவணக்கம் என விழாவிற்குரிய அனைத்து அம்சங்களுடனும் ஆரம்பமாகிய இப்பட்டயமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களும் பட்டயப்படிப்பின் பயிற்றுனர்களாக பணியாற்றிய ஆசிரியர்களும் மலர்மாலை அணிவித்தும் நினைவுப்பரிசில்கள் வழங்கியும் மதிப்பளிக்கப்பட்டனர். விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களின் வாழ்த்துரைகளுடன் பட்டயமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

இப்பட்டயமளிப்பு விழாவினைத் தொடர்ந்து அடுத்த கல்வியாண்டிற்கான ஆசிரியப் பட்டயப் படிப்பின் ஆரம்ப விழாவும் நடைபெற்றது.

தங்கப்பதக்கம் பெற்ற தஸ்மினி ரட்ணராஜா, வெள்ளிப்பதக்கம் பெற்ற சாம்பவி மோகனதாஸ் ஆகியோரோடு பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்றுப் பட்டயம் பெற்ற அறுபத்துநால்வருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதோடு அவர்களின் ஆசிரியப்பணி செம்மையுடன் திகழ, அவர்கள் தொடர் கல்விகளையும் பட்டப் படிப்புக்களையும் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.

ஓராண்டு காலப் பட்டயப் படிப்பு சிறப்பாக நிறைவுற துணை நின்ற அனைவருக்கும் எமது உளமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதோடு இரண்டாம் குழாத்தினரின் பட்டயப் படிப்பும் சிறப்பாக அமைய வாழ்த்துகின்றோம்.

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து

Leave a Reply